புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

புதுகைப் பாவை இலக்கியப் பேரவை சார்பில் பூவரசக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி மிகச்சிறப்பாக இன்று நடைபெற்றது. விழாவிற்கு பள்ளியின் தலைமையாசிரியர் க.அரங்குளவன் தலைமை தாங்கினார். புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தின் முதல் நிலை பெண் காவலர் எஸ்.திலகவதி முன்னிலை வகித்தார். 

புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் கே.பூங்கொடி விழாவினை தொடங்கி வைத்து பேசியது, இப்போதுள்ள கால கட்டத்தில், குழந்தைகள் பாலியல் தொந்தரவை எதிர்கொள்கின்றனர் என்பது வேதனைப்பட வேண்டிய விஷயமாக தோன்றுகிறது. இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்னவென்றால் குழந்தை வயதில் இருக்கும் போதே, சில போதைப் பொருட்களை உட்கொள்வது, செல்போன் உபயோகிப்பது, திரைப்படங்களில் அதிகமாக கவனம் செலுத்துவது இது போன்ற எண்ணற்ற செயல்களால் சிறு வயதில் அதிகமானோர்கள் ஈடுபடுகின்றனர். எங்களுடைய பிரதான பணி என்பது காவல் நிலையத்தில் வருகிற பிரச்னைகளை மட்டுமே தீர்த்து வைப்பது அல்ல. அந்த பிரச்னைகளை உருவாகாமல் பார்த்துக் கொள்வது தான். அதனால் மாணவர்களிடம் நேரடியாக வந்து இது போன்ற விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

புதுகைப் பாவை இலக்கியப் பேரவையின் செயலர், பேராசிரியர் சே.சுசிலாதேவி மாணவர்களுக்கு கைகளை சுத்தம் செய்து வைத்து பேசியது, ஒவ்வொரு நாளும் சுறுசுறுப்பு, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்கு மிகவும் முக்கியமானது ஆரோக்கியம் தான். மாணவர்களாகிய உங்கள் உடல் நலம் என்பது நாட்டின் முன்னேற்றம், பெருமை ஆகியவைகளை எடுத்துச் சொல்லும். ஓவ்வொரு மனிதனுக்குள்ளும் உள்ள முழுத்திறனை வெளிக்கொணர்வதே முழுமையான கல்வி என்றார் சுவாமி விவேகானந்தர். ஆனால் அந்த கல்வியோடு சேர்ந்து ஆரோக்கியமும் மிகவும் முக்கியம். 

திடீரென்று உடல்நிலை சரியில்லை என்றால், உடனே பள்ளிக்குச் செல்லாமல் விடுமுறை எடுத்து விடுவோம். நம்மால் எந்த வேலையும் செய்யாமல் போய் விடும். வயலுக்குச் செல்லுகிற அம்மா நமக்காக வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். சிகிச்சைக்கும், மருந்து மாத்திரைகளுக்கும் பணத்தை செலவு செய்கிற சூழ்நிலை உருவாகும்.

‘வருமுன் காப்போம்’ என்ற பழமொழியை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம். இந்த பழ மொழி சொல்வது போல, சில முயற்சிகளை எடுக்கும் போது நோய் வருவதைக் கட்டுப்படுத்தலாம். புதிதாக தொற்று நோய் தாக்காமல், ஆரோக்கியமாக வாழ ஆசைபடுகிறீர்களா? அதற்கு, கைகளைக் கழுவுவது மிக, மிக முக்கியம் என்று நோய்க்கட்டுப்பாடு மற்றும் நோய்த்தடுப்புக்கான அமெரிக்க மையங்கள் அறிக்கை வெளியிட்டுள்ளன. சுத்தம் இல்லாத கைகளை வைத்து கண்களை கசக்கிக் கொள்வது, மூக்கை தேய்ப்பது இதனால் சளி, காய்ச்சல் எளிதில் தொற்றிவிடும். அதனால் எப்போதுமே கைகளைக் கழுவ வேண்டும். உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த சத்துள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்றார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை பள்ளியின் ஆசிரியர்கள் தமிழ்ச்செல்வி, எம்.இந்திராணி, சுகந்தி, சுவாதி, நித்தியகல்யாணி, சங்கீதா ஆகியோர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியின் முன்னதாக இடைநிலை ஆசிரியை சு.ஈஸ்வரி வரவேற்றார். முடிவில் தமிழாசிரியர் எஸ்.அடைக்கலசாமி நன்றி கூறினார்.