புதுக்கோட்டை 7-வது புத்தகத் திருவிழாவை ஒட்டி – மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை எழுதுதல் மற்றும் பேச்சுப்போட்டி இன்று புதுக்கோட்டை மா.மன்னர் கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது.
10 கல்லூரிகளிலிருந்து 110 மாணவ, மாணவிகள் இப்போட்டிகளில் கலந்து கொண்டனர். போட்டிகளை மன்னர் கல்லூரி மூத்த பேராசிரியர் ஏ.எஸ்.நாகேஸ்வரன் தொடங்கி வைத்தார். புத்தகத் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் கவிஞர் தங்கம் மூர்த்தி, மணவாளன், வீரமுத்து, பாலகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். போட்டிகளை வாசகர் பேரவைச் செயலர் சா.விஸ்வநாதன், ஜெ.ஜெ. கலை அறிவியலில் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் தயாநிதி, ஸ்ரீபாரதி கலை அறிவியல் மகளிர் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் உஷா நந்தினி ஆகியோர் ஒருங்கிணைந்து நடத்தினர்.
பேச்சுப்போட்டிக்கு நடுவர்களாக ஒய்வு பெற்ற மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்ப் பேராசிரியர் திருஞான மூர்த்தி, கவிஞர் பீர்முகமது, கவிஞர் புதுகைப் புதல்வன் ஆகியோர் இருந்து செயலாற்றினர்.
பேச்சுப் போட்டியில் பொன்மாரி கல்வியியல் கல்லூரி மாணவர் செ.க.விஸ்வநாதன் முதல் பரிசையும், ஆலங்குடி அரசு கலை அறிவியல் கல்லூரி மாணவர் சே.ராம விஷ்ணு இரண்டாவது பரிசையும், கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கல்லூரி மாணவி சா.சஸ்ரினா பிர்தவுஸ் மூன்றாம் இடத்தையும் வென்றனர். வெற்றி பெற்ற மூவருக்கும் புதுக்கோட்டை வாசகர் பேரவை சார்பில் நூல்கள் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. மற்ற கவிதை மற்றும் குறும்படப் போட்டிக்கான முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர் சா.விஸ்வநாதன் தெரிவித்தார்.