கேரளாவில் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஏஐ பயிற்சி அளிக்கப்படும் : முதல்வர் பினராயி விஜயன்

கேரளாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயிற்சி வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

ஜெனரேட்டிவ் ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (ஜெனரல் ஏஐ) குறித்த இரண்டு நாள் சர்வதேச மாநாடு, கொச்சியில் இன்று தொடங்கியது. தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களுக்கான இலக்காக கேரளாவை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த மாநாடு தொடங்கப்பட்டுள்ளது.

ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து கேரள அரசு, இந்த மாநாட்டை கிராண்ட் ஹயாட் போல்காட்டி சர்வதேச மாநாட்டு மையத்தில் தொடங்கி உள்ளது. மாநாட்டை முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். விழாவில், தொழில்கள் மற்றம் சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ், தலைமைச் செயலாளர் வி.வேணு, லுலு குழும தலைவர் யூசுப் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், “கேரளாவில் உள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயிற்சி வழங்கப்படும். இதன்மூலம், பாடங்களை மேலும் சிறப்பாக கற்பிக்கும் ஆற்றலை அவர்கள் பெறுவார்கள். பெருமைமிக்க இந்த மைல்கல்லை எட்டிய நாட்டின் முதல் மாநிலமாக நாங்கள் கேரளாவை மாற்றுவோம். 7ம் வகுப்பில் இருந்து இதற்கான பாடங்கள் பாடப்புத்தகங்களில் இடம்பெறும். இதன்மூலம், மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு குறித்து நன்கு அறிந்து கொள்வார்கள். மாணவர்களுக்கு முழுமையான கல்வி அளிக்கப்படும்” என்று குறிப்பிட்டார்.

“அறிவுப் பொருளாதாரமாக மாறுவதற்கான பாதையில் கேரளா முன்னேறிச் செல்லும் இத்தருணத்தில் இந்த மாநாடு நடப்பது குறிப்பிடத்தக்கது. இது, நிலையான வளர்ச்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், அதற்கான வலிமை கேரளாவுக்கு உள்ளது என்பதை வெளிப்படுத்தவுமே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இதுவே இந்த மாநாட்டின் தனித்துவம்” என்று தொழில்கள் மற்றம் சட்டத்துறை அமைச்சர் பி.ராஜீவ் தெரிவித்தார்.

இன்றும் நாளையும் நடைபெற உள்ள இந்த மாநாட்டில், விளக்கக்காட்சிகள், குழு விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் இடம்பெறும் என்றும், செயற்கை நுண்ணறிவின் சமீபத்திய முன்னேற்றங்களை பங்கேற்பாளர்கள் நேரடியாக கண்டு உணரலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.