கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்வு இன்று நடைபெற்றது.
விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு.தனசேகரன் தலைமை தாங்கினார். நிர்வாக அறங்காவலர் அ.கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர் முனைவர் மா.குமுதா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மகப்பேறு பெண்கள் நலம் மற்றும் குழந்தையின்மை சிறப்பு சிகிச்கை மருத்துவர் எஸ்.ஜெயலெட்சுமி கலந்து கொண்டு பேசியது; இன்றைய வளர்இளம் பெண்கள் தங்களுடைய உடலின் மீது அக்கறை செலுத்தாமல் அழகை மட்டுமே கவனிக்கின்றனர். அழகு என்பது எங்கிருந்தோ வருவதல்ல நம் உடலின் ஊட்டச்சத்தில் இருந்தே வருகின்றது. தங்களுடைய முடியின் மீதும், மாதவிடாயின் மீதும் மிகப்பெரிய கவலை ஏற்படுகின்றது.
ஆனால், மாதவிடாய் காலங்களில் மனதளவில் தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ள வேண்டும். ‘சுத்தம் சுகம் தரும’ என்ற பழமொழிக்கேற்ப பெண்களாகிய நாம் சுத்தத்தையும், சுகாதாரத்தையும் பேணுவது மிகவும் அவசியம். காலை உணவை தவிர்க்க கூடாது. புரதம் நிறைந்த உணவை, காரம் இல்லாமல் சமைத்து உண்ண வேண்டும்.
இன்றைய இளம்பெண்களை மிகவும் வருத்துவது நீர்க்கட்டி, இதை உணவின் மூலமாகவே சரிசெய்து விடமுடியும். உடலின் மீதோ, உள்ளத்தின் மீதோ அச்சம் ஏற்பட்டால், மருத்துவரை நாடி ஆலோசனைகளைப் பெற்று அதற்க்கேற்ப மருத்துவம் செய்து கொள்ள வேண்டும் என்றார். இதனைத் தொடர்ந்து மாணவிகளின் சந்தேங்களுக்கு பதிலளித்தார். நிகழ்ச்சியின் முன்னதாக நுண்ணுயிரியல் துறைத்தலைவர் மு.கீதா வரவேற்றார். முடிவில் மனையியல் துறைத்தலைவர் முனைவர் மு.லாவண்யா நன்றி கூறினார்.