ஹிஜாப் தடை தொடர்பாக இரு கல்லூரிகளின் முடிவில் தலையிட மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு

கல்லூரி வளாகத்துக்குள் ஹிஜாப், புர்கா, தொப்பி போன்றவற்றை அணிய தடை விதித்த கல்லூரி நிர்வாகத்தின் முடிவில் தலையிட பாம்பே உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மும்பையில் உள்ள என்.ஜி. ஆச்சார்யா கல்லூரி மற்றும் டி.கே.மராத்தே கல்லூரி ஆகியவற்றில் 2-ம் ஆண்டு மற்றும் 3-ம் ஆண்டு அறிவியல் பயிலும் இஸ்லாமிய மாணவிகள் 9 பேர், தங்கள் கல்லூரி நிர்வாகத்தின் முடிவை எதிர்த்து பாம்பே உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அவர்கள் தங்கள் மனுவில், “நாங்கள் பயிலும் கல்லூரி நிர்வாகங்கள் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டன. மாணவர்கள் ஹிஜாப், நகாப், புர்கா, ஸ்டோல், தொப்பி போன்றவற்றை கல்லூரி வளாகத்துக்குள் அணிய தடை விதிக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த புதிய ஆடைக் கட்டுப்பாடு எங்களின் தனியுரிமை, கண்ணியம் மற்றும் மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது. கல்லூரி நிர்வாகத்தின் இந்த நடவடிக்கை தன்னிச்சையானது, நியாயமற்றது, வக்கிரமானது” என்று தெரிவித்திருந்தனர்.

கல்லூரி நிர்வாகங்கள் சார்பில் நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “கல்லூரி வளாகத்தில் ஹிஜாப், நகாப் மற்றும் புர்கா போன்றவற்றை தடை செய்வதற்கான முடிவு என்பது ஒரே மாதிரியான சீருடை இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு ஒழுங்கு நடவடிக்கை மட்டுமே. இது முஸ்லீம் சமூகத்திற்கு எதிரானது அல்ல”என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் ஏ.எஸ். சந்தூர்கர், ராஜேஷ் பாட்டீல் அடங்கிய அமர்வு, கல்லூரி நிர்வாகம் எடுத்த முடிவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி மாணவிகள் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கர்நாடக ஹிஜாப் தடை வழக்கில் இரண்டு மாறுபட்ட தீர்ப்பை கடந்த 2022 அக்டோபரில் உச்சநீதிமன்றம் வழங்கிய நிலையில் இந்த உத்தரவு வந்துள்ளது.