நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர்களாக பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா உள்ளிட்டோர் பதவியேற்றுக்கொண்டனர்.
18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இடைக்கால சபாநாயகராக பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
இதையடுத்து, பர்த்ருஹரி பஹதாப் மக்களவைக்கு வந்து பொறுப்பை ஏற்றுக்கொண்டார். மேலும், புதிய உறுப்பினர்களுக்கு அவர் பதவிப் பிராமாணம் செய்து வைத்தார். முதல் உறுப்பினராக பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அவரைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, சாலை போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஆகியோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
மேலும், மத்திய அமைச்சர்கள் சிவராஜ் சிங் சவுகான், ஹெச்.டி. குமாரசாமி, மனோஹர் லால் கட்டார், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், ஜிதன் ராம் மாஞ்சி, ராஜிவ் ரஞ்சன் சிங், சர்பானந்த சோனாவால், ராம் மோகன் நாயுடு, பிரஹலாத் ஜோஷி, கிரிராஜ் சிங் உள்ளிட்டோர் மக்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.