நீலகிரியில் பரவலாக மழை : முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி மாவட்டம் முழுவதும் பரவலாக பெய்து வருகிறது. மாவட்டம் முழுவதும் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. இதில் கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதிகபட்சமாக, தேவாலாவில் 57 மில்லி மீட்டரும், கூடலூரில் 54 மில்லி மீட்டர் மழையும் பதிவானது. கோத்தகிரியில் மழையின் காரணமாக வானவில் தென்பட்டது இதனை மக்கள் வெகுவாக ரசித்தனர் மேலும் இதை புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்டனர்.

இந்நிலையில், பருவமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6 வட்டங்களில்; அதிக பாதிப்பு ஏற்படக்கூடிய 283 பகுதிகள் கண்டறியப்பட்டு, இப்பகுதிகளை கண்காணிக்க 42 மண்டல குழுக்கள் அமைக்கப்பட்டு, அக்குழுக்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை தங்க வைக்க 456 பாதுகாப்பு மையங்கள் தயாராக வைக்கவும், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை உடனுக்குடன் மேற்கொள்ள வருவாய்த்துறை, உள்ளாட்சித் துறை, காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை, நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் துறை மற்றும் குடிமைப்பொருள் வழங்கல் துறைகளைச் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் 3500 முதல் நிலை மீட்பாளர்கள் மற்றும் ஆப்தமித்ர திட்டத்தின்கீழ் பயிற்சி பெற்ற 200 பேரிடர் கால நண்பர்கள் தயார் நிலையில் உள்ளனர். இது தவிர மழை மற்றும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்படும் போது, பொதுமக்கள் தகவல் தெரிவிக்க மாவட்ட அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் 0423-2450034, 2450035– க்கு பொதுமக்கள் தொடர்பு கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை நிலவரம் : உதகை 12.3, நடுவட்டம் 23, கிளன்மார்கன் 16, குந்தா 1, அவிநாசி 8, எமரால்டு 6, கெத்தை 1, அப்பர் பவானி 18, குன்னூர் 16, பர்லியார் 7, கேத்தி 27, கோடநாடு 12, செருமுள்ளி 22, பாடந்துறை 24, ஓவேலி 26, பந்தலூர் 56, சேரங்கோடு 26 மி.மீ., மழை பதிவாகியுள்ளது.