சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக மார்க்சிஸ்ட் கம்யூ. அலுவலகம் மீது தாக்குதல் – 13 பேர் கைது

சாதி மறுப்பு திருமணம் செய்து வைத்ததற்காக நெல்லை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் சூறையாடப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை, நம்பிக்கை நகரைச் சேர்ந்த மதன் குமார் (வயது 28) என்பவரும், பாளையங்கோட்டை பெருமாள்புரத்தைச் சேர்ந்த உதய தாட்சாயினி (வயது 23) என்பவரும் கடந்த 6 வருடமாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். இருவரும் கடந்த வியாழக்கிழமை திருமணம் செய்து கொண்டனர். நேற்று மேலப்பாளையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்ய முன்பதிவு செய்திருந்தனர்.

இதனை பெண் வீட்டார் தரப்பில் தடுத்த நிலையில் பாதுகாப்பு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அணுகினர். காவல்துறை அனுமதியோடு திருமணத்தை பதிவு செய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொண்டனர். இந்த நிலையில் வெள்ளாளர் முன்னேற்றக் கழக தலைவர் பந்தல் ராஜா மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட 25 பேர் கொண்ட கும்பல் திருநெல்வேலி, வினோபா நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திற்குள் நுழைந்து மேஜை, நாற்காலி, கண்ணாடி, கதவு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கினர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக, சாதி மறுப்பு திருமணம் செய்த பெண்ணின் தாய் சரஸ்வதி, தந்தை முருகவேல், பந்தல் ராஜா உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 9 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.