’காலம் உள்ளவரை கலைஞர்’ என்ற தலைப்பிலான கலைஞரின் வரலாற்று குறும்படத்தை மு.க.ஸ்டாலின் மெய்நிகர் தொழில்நுட்ப உதவியோடு கண்டு ரசித்துள்ளார்.
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, சென்னை பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில், ’காலம் உள்ளவரை கலைஞர் – நவீன தமிழகத்தின் சிற்பிக்கு நவீன கண்காட்சி’ என்ற கலைஞரின் புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
’திருவாரூரில் ஆரம்பித்து சென்னை மெரினா கடற்கரை நினைவிடம் வரை’ என கலைஞரின் வாழ்வில் நடந்தேறிய முக்கிய நிகழ்வுகள், நூற்றுக்கும் மேலான புகைப்படங்களாக இந்த கண்காட்சியில் தொகுத்து வைக்கப்பட்டுள்ளன. மேலும் கலைஞரின் வயதில் அவரது நாற்பதுகளை பிரதிபலிக்கும் தோற்றத்தில், ஹாலோகிராபி தொழில்நுட்பம் மூலம் நேரடியாக தரிசிக்க வழி செய்துள்ளனர். மேலும் மெழுகு உருவச் சிலையாக இடம்பெற்றுள்ள கலைஞர் செல்பி பாயிண்டில் பொதுமக்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
இது தவிர்த்து வாழும் வரலாறு முத்தமிழறிஞர் கலைஞரின் கதைப்பாடல் காட்சி இடம் பெற்றுள்ளது. கூடவே முப்பரிமாண கேமரா மூலம் பதிவு செய்யப்பட்ட கலைஞரின் வரலாற்று காவியம் என்ற குறும்படத்தை ஹாலோகிராபி தொழில்நுட்பத்தில் விர்ச்சுவல் ரியாலிட்டி அடிப்படையில் காணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் வரலாற்று குறும்படத்தை, விர்ச்சுவல் ரியாலிட்டிக்கான உபகரணங்களை அணிந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தரிசித்துள்ளார். உடன் முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா உள்ளிட்டோர் கலைஞர் குறும்படத்தை கண்டு ரசித்துள்ளனர். ஜூன் 1 அன்று தொடங்கிய இந்த புகைப்படக் கண்காட்சி, 10 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.