புதிய நாடாளுமன்றத்திற்குள் போலி ஆதார் கார்டுடன் நுழைய முயன்ற மூன்று பேர் கைது

டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்குள் போலி ஆதார் கார்டுடன் நுழைய முயன்ற மூன்று பேரை மத்திய தொழில் பாதுகாப்பு படை (சிஐஎஸ்எஃப்) வீரர்கள் கைது செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலி ஆதார் அட்டைகளைப் பயன்படுத்தி புதிய நாடாளுமன்றக் கட்டத்தில் பாதுகாப்புகளை மீறி இன்று காலை மூன்று பேர் நுழைய முயன்றுள்ளனர். அவர்கள் மூன்று பேரையும் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர்கள் வழக்கமான பாதுகாப்பு மற்றும் அடையாள சோதனையின் போது நாடாளுமன்ற நுழைவு வாயில் ஒன்றில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அப்போது சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் அவர்களது அடையாள ஆவணங்களில் உள்ள முரண்பாடுகளைக் கண்டறிந்தனர். இதையறிந்த அதிகாரிகள் உடனடியாக சந்தேக நபர்களை கைது செய்து அப்பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்தினர்.

மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் காசிம், மோனிஸ் மற்றும் சோயப் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்கள் மீது சதி, மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இவர்கள் மூன்று பேரும் டிவி புராஜெக்ட்ஸ் லிமிடெட் மூலம் நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள எம்.பி ஓய்வறையில் பணிக்கு அமர்த்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், அவர்கள் போலி அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியது பாதுகாப்பு படையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு உள்ள டெல்லி நாடாளுமன்றக் கட்டித்திற்குள் மூன்று பேர் ஊடுருவிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.