நாடு முழுவதும் 6-ம் கட்டமாக 58 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் இந்திய தேர்தல் குறித்து தனது ட்விட்டர் பதிவில் கருத்திட்ட பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு பதிலடி கொடுத்துள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்.
முன்னதாக, டெல்லியில் தனது மனைவி சுனிதா கேஜ்ரிவாலுடன் வாக்களித்த அரவிந்த் கேஜ்ரிவால், “நான் இன்று எனது மனைவி, குழந்தைகள், தந்தையுடன் வாக்களித்தேன். என் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை. அதனால் அவர் வாக்களிக்க வரவில்லை. நான் பணவீக்கம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக வாக்களித்துள்ளேன்” என்று பேட்டியளித்திருந்தார். அந்த வீடியோவை எக்ஸ் சமூக வலைதளத்திலும் பகிர்ந்தார்.
அதில் பின்னூட்டம் இட்ட பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஃபவாத் சவுத்ரி ஹுசைன், “அமைதியும், நல்லிணக்கமும் வெறுப்பு மற்றும் பயங்கரவாத சக்திகளை வீழ்த்தட்டும்” என்று கூறியிருந்தார். இதில் பதிலளித்த கேஜ்ரிவால், “சவுத்ரி அவர்களே, நானும் என் தேச மக்களும் இங்குள்ள பிரச்சினைகளைக் கையாள முழு திறன் கொண்டுள்ளோம். உங்களின் ட்வீட் எங்களுக்குத் தேவையில்லை. உண்மையில், பாகிஸ்தானில் இப்போது நிலைமை மோசமாக இருக்கிறது. நீங்கள் உங்கள் தேசத்தை கவனித்துக் கொள்ளுங்கள். இங்கே நடைபெறும் தேர்தல் எங்கள் உள்நாட்டு நிகழ்வு. அதில் பயங்கரவாதத்தின் மிகப் பெரிய வழங்குநரான பாகிஸ்தானில் இருந்து எவ்வித தலையீடு வருவதையும் இந்தியா பொறுக்காது” என்று குறிப்பிட்டுள்ளார்.