சேலம் அருகே முயல் வேட்டையில் ஈடுபட்டவர்களை வனத்துறையினர் கைது செய்த நிலையில், ஊர் பொதுமக்கள் ஒன்று திரண்டு, வனத்துறையினரை தாக்கி விட்டு, கைதானவர்களை மீட்டுச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பெரம்பலூர் மாவட்ட எல்லையில் கிழக்கு ராஜாபாளையம் பகுதியில் அம்மன் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு வருடமும் சித்திரை திருவிழாவின் போது முயல் வேட்டை நடத்தப்படுவது வழக்கம். பல ஆண்டுகளாக பாரம்பரிய முறைப்படி இந்த முயல் வேட்டை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது குறித்த தகவல் அறிந்த சேலம் மாவட்டம் கெங்கவல்லி வனத்துறையினர், முயல் வேட்டையில் ஈடுபடுவதற்கு தடை விதித்திருந்தனர். இது தொடர்பாக மாவட்ட எல்லைப் பகுதிகளில் அவர்கள் தீவிர சோதனையிலும் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே ராஜகோபாலபுரம் பகுதியில் 50 பேர் கொண்ட நபர்கள் வளர்ப்பு நாய்கள் மற்றும் குத்துக்கோல் ஆகியவற்றுடன் முயல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று அவர்கள் சம்பவ இடத்திற்கு சென்ற போது, இரண்டு முயல்களை வேட்டையாடி விட்டு, குத்து கோல்களுடன் நின்று கொண்டிருந்த மணிகண்டன் மற்றும் குணசேகரன் ஆகிய இருவரையும் மடக்கிப்பிடித்தனர். தொடர்ந்து அவர்களை வனத்துறை வாகனத்தில் ஏற்றி வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்ல முயற்சி செய்தனர்.
அப்போது அங்கு வந்த கிழக்கு ராஜாபாளையம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் பொன்னர் உள்ளிட்டோர், பல ஆண்டுகளாக தங்கள் ஊரில் இந்த திருவிழா நடைபெற்று வருவதாகவும், அதனை வனத்துறையினர் தடுக்கக் கூடாது எனவும் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது 30க்கும் மேற்பட்டோர் சேர்ந்து வனத்துறையினருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பின்னர் வனத்துறையினரை தள்ளிவிட்டு, வாகனத்தில் இருந்த இருவரையும் மீட்டுக் கொண்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வனத்துறையினர் இன்று வீரகனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதன் பேரில் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பொன்னர் உட்பட 30 பேர் மீது அரசுப் பணியாளர்களை தாக்கியது, அரசுப் பணியை செய்ய விடாமல் தடுத்தல், வன உயிரின வேட்டை உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதே போல் வனத்துறையினரும், வன உயிரின வேட்டை தொடர்பாக ஆத்தூர் 2வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஊராட்சித் துணைத் தலைவர் பொன்னர் உட்பட 8 பேர் மீது வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த சம்பவம் காரணமாக சேலம், பெரம்பலூர் மாவட்ட எல்லைகளில் பரபரப்பு நிலவி வருகிறது.