மத்திய பிரதேசத்தில் பேருந்து பற்றி எரிந்ததால் நாசமான வாக்குப்பதிவு இயந்திரங்கள்

மத்திய பிரதேசத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்தில், வாக்குப்பதிவு இயந்திரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நேற்று நாடு முழுவதும் உள்ள 94 தொகுதிகளில் 3ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மத்திய பிரதேசத்தில் 9 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மாலை 7 மணியுடன் வாக்குப் பதிவு நிறைவடைந்தது. இதையடுத்து வாக்குப்பதிவு இயந்திரங்களை வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

பீட்டுல் மாவட்டத்தில் உள்ள கோலா கிராமத்தில் வாக்குகள் பதிவான வாக்குப்பெட்டிகளை ஊழியர்கள் பேருந்து மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்து சென்று கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் திடீரென அவர்கள் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக பேருந்தில் இருந்து அனைவரும் வெளியேறியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. ஆனால் 6 வாக்கு சாவடிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் முற்றிலும் எரிந்து நாசமானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர், விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்தில் நல்வாய்ப்பாக தேர்தல் அதிகாரிகள் யாரும் காயம் அடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் மறு தேர்தல் நடத்துவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.