கோடை வெயில் கொளுத்துவதால் மண் பானைக்கு மாறும் மக்கள்

கோடை வெயிலைச் சமாளிக்க குளிர்ந்த நீர் பருகி உடல் சூட்டைத் தணிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்கள் மண் பானைகளை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.

வெண்கலம், அலுமினியம், எவர்சிலவர் பாத்திரங்கள் பயன்படுத்துவற்கு முன் மக்கள், சமைப்பது முதல் தானியங்களைச் சேமித்து வைப்பது உட்ட அனைத்துப் பயன்பாட்டுக்கும் மண்பாண்டங்களையே பயன்படுத்தி வந்தனர். உடலுக்கு மிகவும் நன்மை பயத்த இந்த மண்பாண்டப் பொருட்கள் மக்களின் வாழ்வியலோடு கலந்திருந்தது. ஆனால், காலப்போக்கில் வெண்கலம், அலுமினியம், எவர்சில்வர், பிளாஸ்டிக் என பல்வேறு வகையான பாத்திரங்களை மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மண் பாண்டப் பொருட்களைப் பயன்படுத்துவது நமது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது என்று சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால், சமையலுக்கும், குடிநீரைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவதற்கும் மக்கள் மண் பாண்டங்களை நாடுகின்றனர். தற்போது கோடைக் காலம் என்பதால் மண் பானையில் குடிநீரை ஊற்றிவைத்துக் குடிக்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. குடிநீரில் தூசு உட்பட கண்ணுக்குத் தெரியாத நச்சுகள் ஏதும் இருந்தால்கூட மண் பானை அவற்றை வடிகட்டி நன்னீராக மாற்றித் தருகிறது. இதனால், சுகாதார ரீதியாக பலரும் மண்பானையை விரும்பி வாங்குகின்றனர்.

மதுரையில் ஆரப்பாளையம், அழகர் கோவில், வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி, அலங்காநல்லூர் போன்ற பகுதிகளில் மண் பானை விற்பனை ஆண்டு முழுவதுமே நடக்கிறது. கோடை வெயிலைச் சமாளிக்க குளிர்ந்த நீீரைப் பருக மண் பானைகளை மக்கள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.

இது குறித்து மண் பானை வியாபாரிகள் கூறியதாவது: மண் பானைகளில் இயற்கை முறையில் குளிரூட்டப்பட்ட குடிநீர் கிடைப்பதால் உடல் சூட்டையும், தாகத்தையும் தணிக்கும். பிளாஸ்டிக் குடங்கள், அலுமினியப் பாத்திரங்களின் வருகையால் மண் பானைகளின் பயன்பாட்டை மக்கள் மறந்துவிட்டனர். ஆனாலும், சமீப காலமாக இயற்கை சார்ந்த வாழ்க்கையை மக்கள் விரும்புவதால் இயற்கை விவசாயம், செக்கு எண்ணெய், மண் பானை என மக்கள் உடல் ஆரோக்கியத்துக்கான வாழ்வியல் முறைகளில் ஆர்வம் காட்டத் தொடங்கியுள்ளனர்.

இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மீண்டும் மண் பானை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் மக்கள் விரும்பும் வடிவங்களில் இக்காலத் தலைமுறையினரும் பயன்படுத்தும் தொழில்நுட்பத்துடன் மண் பானைகளைத் தயார் செய்து விற்பனை செய்கிறோம் என்று கூறினர்.