பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்தது உச்சநீதிமன்றம்

பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய செந்தில் பாலாஜியின் மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பண மோசடி வழக்கில், குறிப்பாக தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஒரு வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்து அவரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்தது. இதில் அவரது ஜாமின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்த நிலையில், ஜாமின் கோரி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. தற்போது உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் அ.சி.ஓகா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை விசாரணையின்போது, மனுதாரர் வழக்கறிஞர் ஆஜராகி, செந்தில் பாலாஜி 320 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருப்பதால் விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால், அமலாக்கத்துறை சார்பில் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிய நிலையில், மே 6ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கு விசாரணையின்போது, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, இந்த விசாரணை நடத்தி முடிக்க சில காலம் பிடிக்கும் என தெரிவித்தார்.

வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில், ஏற்கனவே 320 நாட்களுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாகவும், விசாரணையை விரைவுபடுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்கு விசாரணையை ஒத்திவைப்பதற்கு செந்தில் பாலாஜி தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் அமலாக்கத்துறையின் கோரிக்கையை ஏற்று வழக்கு விசாரணையை மே 15ம் தேதிக்கு தள்ளிவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.