“பாஜக தங்களின் கோட்டையாக நினைக்கும் இடங்களில் கூட, பிரதமர் ஏன் இவ்வளவு பதற்றமாகவும், பயத்துடனும் இருக்கிறார்” என காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டதால் பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார். அதே போல் ஒரு சம்பவம் மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.
அங்குள்ள இந்தூர் மக்களவை தொகுதியில் தற்போதைய பாஜக எம்பியான சங்கர் லால்வானிக்கு எதிராக காங்கிரஸ் சார்பில் அக்ஷய் காந்தி பாம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மே 13 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நேற்று வேட்புமனுவை திரும்ப பெறுவதற்கான கடைசி நாளாகும். ஆனால் காங்கிரஸ் வேட்பாளர் அக்ஷய் தனது மனுவை வாபஸ் பெற்றுவிட்டார்.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் இது குறித்து தனது எக்ஸ் தளத்தில், “சூரத் மற்றும் இந்தூர் மக்களவை தொகுதிகளில் 1984 தேர்தல் முதல் காங்கிரஸ் வெற்றி பெற்றதில்லை. ஆனாலும் தற்போதைய தேர்தலில் இந்த இரு இடங்களிலும் காங்கிரஸ் வேட்பாளர்கள் மிரட்டப்பட்டு, வேட்பு மனுவை திரும்பப் பெற வைத்துள்ளனர். பாஜக தங்களின் கோட்டையாக நினைக்கும் இடங்களில் கூட, பிரதமர் ஏன் இவ்வளவு பதற்றதமாகவும், பயத்துடனும் இருக்கிறார்” எனப் பதிவிட்டுள்ளார்.