இந்தியாவின் வீரம், தைரியத்தின் தலைநகரம் சியாச்சின் என, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதத்துடன் கூறியுள்ளார்.
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இன்று லடாக்கில் உள்ள சியாச்சின் பனிப் பிரதேசத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். மேலும் அங்குள்ள போர் நினைவிடத்தில் ராஜ்நாத் சிங் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து ராணுவ வீரர்களிடையே ராஜ்நாத் சிங் பேசினார்.
அப்போது, “உலகின் மிக உயரமான போர்க்களமான சியாச்சின் பனிப்பாறையில் நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள உங்களை வாழ்த்துகிறேன். சியாச்சின் நிலம் சாதாரணமானது அல்ல. அது நாட்டின் இறையாண்மையையும், விடாமுயற்சியையும் குறிக்கிறது. இது நமது தேசிய உறுதிப்பாட்டை உள்ளடக்கியது. டெல்லி நமது தேசிய தலைநகரம். மும்பை நமது பொருளாதார தலைநகரம். பெங்களூரு நமது தொழில்நுட்ப தலைநகரம். சியாச்சின் வீரம் மற்றும் தைரியத்தின் தலைநகரம்.” என்றார்.
டெல்லியில் இருந்து சியாச்சினுக்குப் புறப்படுவதற்கு முன்பு, ராஜ்நாத் சிங், எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், “புது டெல்லியிலிருந்து சியாச்சினுக்கு புறப்படுகிறேன். அங்கு நிறுத்தப்பட்டிருக்கும் நமது துணிச்சலான ராணுவ வீரர்களை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.
காராகோரம் மலைத்தொடரில் சுமார் 20 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ளது சியாச்சின் பனிப்பாறை. உலகின் மிக உயரமான போர்க்களம் இதுவாகும். இங்கு, இந்திய ராணுவ வீரர்கள் பனிப்பொழிவு மற்றும் பலத்த காற்று போன்ற கடுமையான சவால்களை எதிர்கொண்டு நாட்டை காக்கும் பணியில் தங்களை அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர்.