“பாஜகவின் ‘400 இடங்கள்’ என்ற படம் முதல் நாளே தோல்வி” – தேஜஸ்வி யாதவ் விமர்சனம்

400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்து விட்டது என ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரும், பிஹார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் விமர்சனம் செய்துள்ளார்.

பிஹாரில் ஜமுய், நவாடா, கயா மற்றும் அவுரங்காபாத் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இந்த முதல் கட்ட வாக்குப்பதிவில் 48.88 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளதாவது, “எங்கள் கூட்டணி வெற்றி பெறும். தொகுதி வாரியாக கூட்டங்களை நடத்தினோம். நல்ல கருத்துக்கள் வந்துள்ளன.

400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே சூப்பர் ஃப்ளாப் ஆகியுள்ளது. பிஹார் மக்கள் இந்த முறை அதிர்ச்சி தரும் முடிவுகளைத் தருவார்கள். பிஹார் மக்களுக்கு பாஜக எதுவும் செய்யவில்லை.

2014, 2019-ல் மோடி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. இப்போது பாஜகவின் பொய் வாக்குறுதிகளால் பொதுமக்கள் சோர்வடைந்துள்ளனர். பிஹாரில் வேலையில்லா திண்டாட்டம் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. இந்த முறை பாஜகவினர் மிகவும் கவலையடைந்துள்ளனர். அரசியல் சட்டத்தை ஒழிப்போம் என்கிறார்கள். அரசியலமைப்பை அழிப்பவர்கள் தாங்களாகவே அழிக்கப்படுவார்கள்” என்றார்.