“பாஜக கூட்டணிக்கு 400+ வெற்றி உறுதி” – வேட்புமனு தாக்கல் செய்த அமித் ஷா நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 400+ இடங்களில் உறுதியாக வெற்றி பெறும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு குஜராத்தின் காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷா, இன்று அதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரோடு, மாநில முதல்வர் பூபேந்திர படேல் உடன் இருந்தார். வேட்புமனு தாக்கலுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, “காந்திநகர் தொகுதியில் இன்று நான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளேன். எல்.கே. அத்வானி, அடல் பிஹாரி வாஜ்பாய் ஆகியோர் வெற்றிபெற்ற தொகுதி இது. அதோடு, நரேந்திர மோடி வாக்காளராக உள்ள தொகுதி இது என்பது எனக்கு பெருமை அளிக்கிறது.

காந்திநகர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாகவும், எம்பியாகவும் 30 ஆண்டுகள் இருந்துள்ளேன். காந்திநகர் தொகுதி மக்கள் எனக்கு அளப்பரிய அன்பை வழங்கி இருக்கிறார்கள். இங்கு பூத் அளவிலான பணியாளராக நான் இருந்திருக்கிறேன். தற்போது இந்த தொகுதியின் வேட்பாளர். காந்திநகர் தொகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 22 ஆயிரம் கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறேன்.

இந்த தேர்தலில், 400+ தொகுதிகளில் வெற்றியைத் தந்து நரேந்திர மோடியை மூன்றாவது முறையாக பிரதமராக்க ஒட்டுமொத்த நாடும் உற்சாகத்துடன் உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், நாடு அதன் பெருமையை மீட்டெடுத்துள்ளது. நாட்டு மக்கள் கொடுத்த 10 வருடங்கள் UPA அரசாங்கம் ஏற்படுத்திய குழிகளை நிரப்பவே செலவழிக்கப்பட்டது. இந்த 5 வருடங்கள் வளர்ச்சி அடைந்த பாரதத்தைக் கட்டமைக்க அடித்தளம் அமைக்கும் ஆண்டாக இருக்கும். தாமரை மிகப்பெரிய பெரும்பான்மையுடன் எங்கும் மலரும். 400 இடங்களைக் கடக்கும்” என்று கூறினார்.

குஜராத்தில் மொத்தம் 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. அனைத்து தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் 2019 மற்றும் 2014 பொதுத் தேர்தல்களில் 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெற்று காங்கிரசை ஒயிட்வாஷ் செய்தது குறிப்பிடத்தக்கது.