“கச்சத்தீவு பிரச்சினை என்பது ஏற்கெனவே இரண்டு நாடுகளும் பேசி முடிவான விஷயம். அதனை பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லை” என்று, சிவகங்கை மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் தனது சொந்த ஊரான கண்டணூரில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “மத்தியில் அமையக்கூடிய புதிய அரசுதான், மக்களுக்கான திட்டங்களை கொண்டு வரமுடியும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு தேர்தல் அறிக்கைகளில் கூறப்பட்டவை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும்.
கச்சத்தீவு பிரச்சினை என்பது ஏற்கெனவே இரண்டு நாடுகளும் பேசி முடிவான விஷயம். அதைப் பற்றி பேசி இனி எந்த பிரயோஜனமும் இல்லை. காங்கிரஸ் தலைமையில் புதிய அரசு அமையும் போது கச்சத்தீவு பிரச்சினையால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் பிரச்சினை தீர்க்க பரிசீலிக்கப்படும். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எல்லா விதத்திலும் ஆபத்து இருக்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மையை பல நிலைகளில் பாஜக சிதைத்துக் கொண்டிருக்கிறது. இந்திய கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பன்முகத்தன்மை பாதுகாக்கப்படும்” என்றார்.