பள்ளிக்கு மாணவர்கள் சீருடை அணியாமல் காவி உடை அணிந்து வந்தது குறித்து கேள்வி எழுப்பியதால், தெலங்காவின் மஞ்சேரியல் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றின் மீது மத அமைப்பைச் சேர்ந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடத்திய உள்ளது.
அன்னை தெரசா பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் அனுமன் தீக்ஷா உடையில் பள்ளிக்கு வந்ததால் அவர்களை வகுப்பறைக்குள் அனுமதிக்க ஆசிரியர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாணவர்களின் பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில் பள்ளியின் தாளாளர் மற்றும் முதல்வர் மீது பிரிவு 153(ஏ) (மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் இரண்டு குழுக்களுக்கு இடையில் பகையை உண்டாக்குதல்) மற்றும் பிரிவு 295 (ஏ) (மத உணர்வுகளை புண்படுத்துதல்) கீழ் நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், “21 நாட்கள் சிறப்பு மத வழிபாட்டின் ஒரு பகுதியாக மாணவர்கள் காவி உடை அணிந்துச் சென்றனர்” எனத் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகத்தின் தரப்பில், “மாணவர்கள் சீருடை அணியாமல் வந்தது குறித்து அவர்களின் பெற்றோரை அழைத்து வரும்படி தலைமை ஆசிரியர் கூறினார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அனுமன் தீக்ஷா உடையைக் காரணம் காட்டி மாணவர்களை பள்ளிக்குள் அனுமதிக்காத நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், மாணவர்களை ஆண்டுத் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று கூறியும் மத அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், பள்ளிக்குள் நுழைந்து பள்ளியின் ஜன்னல்களை உடைத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சமூக வலைதளங்களில் வெளியான வீடியோவில் பள்ளியின் ஜன்னல்கள் பூந்தொட்டிகள் உடைந்திருப்பதை பார்க்க முடிகிறது. இந்தச் சம்பவம் குறித்து உள்ளூர் காவல் நிலையத்தில் பள்ளி நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது. எனினும், இதுவரை கைது நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.