தொகுதி மேம்பாட்டு நிதியைப் பயன்படுத்தியது குறித்து அவதூறாகப் பேசியதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது, மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
கடந்த 15-ம் தேதி அதிமுக கூட்டணி சார்பில் மத்திய சென்னையில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் பார்த்தசாரதியை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “மத்திய சென்னை திமுக சார்பில் போட்டியிடும் தயாநிதி மாறன், அவருடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் 75 சதவீதத்தை செலவு செய்யவே இல்லை. அப்படியென்றால், இவர் எப்படி செயல்பட்டிருப்பார் என்பதை மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில், எடப்பாடி பழனிசாமி மீது தயாநிதி மாறன் இன்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், ‘மத்திய சென்னை தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் பயன்படுத்தவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். ஆனால், எம்பி நிதியை முழுமையாக பயன்படுத்தி இருக்கிறேன். அப்படி இருக்கையில், உண்மைக்கு மாறாக தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்று நோக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதனால், அவர் மீது உரிய நடடிக்கை எடுக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். மே 14-ம் தேதி இந்த மனு விசாரணைக்கு வரவிருக்கிறது.
நீதிமன்றம் விட்டு வெளியே வந்து செய்தியாளர்களிடம் பேசிய தயாநிதி மாறன், ” தொகுதி மேம்பாட்டு நிதியை 75 சதவீதம் நான் பயன்படு்ததவில்லை என்று அவதூறு ஏற்படுத்தியதற்கு மன்னிப்பு கேட்காததால் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கிரிமினல் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளேன். 95 சதவீதத்திற்கும் மேல் எனது தொகுதி மேம்பாட்டு நிதியை செலவிட்டுள்ளேன். சுமார். 17 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதில், தற்போது 17 லட்சம் மட்டுமே மீதமுள்ளது. அனைத்து நிதியையும் தொகுதிக்கு செலவிட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.