எம்எல்ஏ-க்களுக்கு 50 கோடி கொடுத்து ஆட்சியைக் கவிழ்க்க பாஜக சதி : சித்தராமையா குற்றச்சாட்டு

கர்நாடகாவில் மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக ‘ஆபரேஷன் தாமரை’ மூலம் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களுக்கு தலா ரூ.50 கோடி கொடுத்து ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி செய்வதாக முதல்வர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.

ஆங்கில செய்தி ஊடகம் ஒன்றுக்கு, கர்நாடக முதல்வர் சித்தராமையா பேட்டி அளித்தார். அப்போது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்தால், அதன் பின் சித்தாராமையா தலைமையிலான அரசு கவிழும் என பாஜக கூறியிருந்த குற்றச்சாட்டு குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த முதல்வர் சித்தராமையா, “கடந்த ஓராண்டாக எனது அரசை கவிழ்க்க பாஜகவினர் முயற்சி செய்து வருகின்றனர்.

எங்கள் எம்எல்ஏ-க்களுக்கு ரூ.50 கோடி வரை விலை பேசி, அந்த முயற்சியில் தோற்றுப் போனார்கள்.” என்றார். தேர்தலுக்குப் பிறகு காங்கிரஸ் தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு, “அதற்கு சாத்தியமில்லை. எங்கள் எம்எல்ஏ-க்கள் வெளியேற மாட்டார்கள். ஒரு எம்எல்ஏ கூட எங்கள் கட்சியை விட்டு விலக மாட்டார். கர்நாடகாவில் எனது தலைமையிலான அரசு 5 ஆண்டுகளையும் முழுமையாக நிறைவு செய்யும் ” என்றார்.

இந்நிலையில் முதலவர் சித்தராமையா கூறிய குற்றச்சாட்டு குறித்து, பாஜக எம்பி- எஸ்.பிரகாஷ் கூறுகையில், “அவர் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மீண்டும் மீண்டும் கூறுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது.

தன்னை ஆதரிக்கும் சமூகத்தின் ஒரு பிரிவின் அனுதாபத்தைப் பெறுவதற்காக மட்டுமே சித்தராமையா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை கூறிவருகிறார். மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் 28 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதில் கவனம் செலுத்துவதை விட்டுவிட்டு, தேர்தலுக்குப் பிறகு தன்னை தக்கவைத்துக்கொள்வதில் மட்டுமே சித்தராமையா கவனம் செலுத்துகிறார்” என்றார்.