கோவை மக்களவைத் தொகுதிக்கு 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் : தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அண்ணாமலை

கோவை மக்களவைத் தொகுதிக்கு 500 நாட்களில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் எனக்கூறி, தேர்தல் அறிக்கையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் அண்ணாமலை காளப்பட்டி பகுதியில் உள்ள தேர்தல் பணிமனையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். பல்வேறு துறைகளைச் சேர்ந்த 12 பேர் முன்னிலையில் அவர் இன்று கோவை மக்களவைத் தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். ’என் கனவு நமது கோவை’ என்ற தலைப்பில் 100 வாக்குறுதிகள் கொண்ட தேர்தல் அறிக்கையை அவர் அப்போது வெளியிட்டார். இந்த வாக்குறுதிகள் அடுத்த 500 நாட்களில் நிறைவேற்றப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், ‘கோவை விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, சர்வதேச முனையமாக தரம் உயர்த்தப்படும். தமிழகத்தில் 2வது ஐஐஎம் கோவையில் அமைக்கப்படும். ஆனைமலை-நல்லாறு திட்டம் செயல்படுத்தப்படும், நொய்யல் மற்றும் கெளசிகா நதிகள் மீட்டெடுக்கப்படும். பவர் டெக்ஸ் திட்டம் மூலம் விசைத்தறியாளர்களுக்கு சூரிய ஒளி மின் தகடுகள் வழங்கப்படும். கோவையில் என்.ஐ.ஏ., மற்றும் என்.சி.பி., கிளைகள் அமைக்கப்படும்.’ என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ‘கோவையில் 4 நவோதயா பள்ளிகள் திறக்கப்படும். தேசிய விளையாட்டு ஆணையத்தின் கிளை கோவையில் துவங்கப்படும். கோவையில் 250 மக்கள் மருந்தகங்கள் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும். நாடு முழுவதும் உள்ள புராதன மையங்களுக்கு சென்று வர 10 சிறப்பு ரயில் சேவைகள் துவக்கப்படும். கர்மவீரர் காமராஜர் நினைவாக 3 உணவு வங்கிகள் திறக்கப்படும். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு வழங்கப்பட்ட நிதி, சிறப்பு தணிக்கைக்கு உட்படுத்தப்படும். முறைகேடுகள் கண்டறியப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.’ என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.