கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை பயனாளர்களுக்கு அளிக்க எந்த தடையும் இல்லை என்று தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், “மக்களவை தேர்தலுக்காக தமிழ்நாட்டில் இதுவரை 4.36 கோடி பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. ஏப்.13-க்குள் பூத் சிலிப் வழங்கும் பணி முடிக்கப்படும் என மாவட்ட தேர்தல் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர். புதிய வாக்காளர்களுக்கு இந்த முறை 100 சதவீதம் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். புதிய வாக்காளர்களில் 6,000 பேருக்கு மட்டும் அடையாள அட்டை அனுப்பவேண்டி உள்ளது. வருமானவரித்துறையால் ரூ.74 கோடி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளால் ரூ. 70.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சின்னம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி கொடுத்த புகார் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சின்னங்கள் ஒதுக்கீடு புத்தகத்தில் எப்படி இருந்ததோ அப்படித்தான் அச்சிடப்பட்டுள்ளது. நீலகிரி உதவி செலவின பார்வையாளர் புகார் எங்களுக்கு வரவில்லை. நீலகிரியில் வேட்பாளரின் செலவு கணக்கை குறைத்து காட்ட சொன்னதாக மாவட்ட தேர்தல் அதிகாரி மீது பார்வையாளர் புகார் கூறுகிறார். இது குறித்து தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம். தமிழக அரசால் மாதந்தோறும் வழங்கப்படும் மகளிர் உரிமைத் தொகைக்கு தடையில்லை. அரசு செயல்படுத்திவரும் திட்டங்களை தொடரலாம் என தேர்தல் விதிகள் உள்ளன. எனவே, மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்க தேர்தல் ஆணையத்திடம் எந்த அனுமதியும் பெற தேவையில்லை,” என்று தெரிவித்தார்.