“விவசாயி சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக்கூடாது என்ற பயம்” – நாமக்கல் பிரச்சாரத்தில் சீமான் காட்டம்

விவசாயி சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக்கூடாது என்ற பயம்” என்று நாமக்கல்லில் நடந்த பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார்.

மக்களவைத் தேர்தலில் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கனிமொழியை ஆதரித்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “இந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் அவரவர் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

70 ஆண்டுகளுக்கு மேல் ஒரே சின்னம் உதயசூரியன், 60 ஆண்டுகளாக இரட்டை இலை சின்னம். கை சின்னத்தில் காங்கிரஸ், தேசிய மலரான தாமரை சின்னத்தில் பாஜக போட்டியிடுகிறது. பாமகவுக்கு மாம்பழம், டிடிவி தினகரனுக்கு குக்கர், ஜி.கே.வாசனுக்கு சைக்கிள், என்னுடைய விவசாயி சின்னம் எங்கே? அதை எடுத்துக் கொண்டனர். ஏன் எடுத்தனர்? பயம். அந்த சின்னத்துடன் சீமானை தேர்தலை சந்திக்க விடக் கூடாது என்ற பயம்.

இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் 7 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதேபோல், 40 தொகுதிகளைக் கொண்ட பிஹாரில் 7 கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படுகிறது. 42 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் 7 கட்டங்களாக தேர்தல். 14 தொகுதிகளைக் கொண்ட அஸ்ஸாமில் 3 கட்டங்களாக தேர்தல்.

புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளைக் கொண்ட தமிழகத்தில் ஒரே கட்டத் தேர்தல். பாஜக முதலில் இங்கு தேர்தல் நடத்த காரணம், எங்கே பலவீனமாக இருக்கிறோமோ அங்கு சென்று பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான்.

திரும்ப திரும்ப மோடி ஓடி ஓடி வருகிறார். ஏன்? எப்படியாவது அந்த வாக்கு இயந்திரத்துக்குள் வேலையைக் காட்டி பாஜக வென்றுவிட்டதாக காட்ட வேண்டும். தேர்தல் பணிகளை மேற்கொள்ள மிகவும் குறைவான நாட்களே இருந்தன. இன்னும் ஒரு 10 நாட்கள் கூட கொடுத்தால், என்ன ஆகும். மீண்டும் மீண்டும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பிரச்சாரம் செய்திருப்போம். மற்ற கட்சிகள் அவர்களது சின்னத்தில் நிற்கின்றனர். ஆனால், எங்களுக்கு தேர்தலுக்கு முதல் நாள் ஒரு சின்னத்தை கொடுக்கின்றனர். ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள், அரிசி, லேப்டாப், சைக்கிள் என நலத்திட்ட உதவிகளில் அவர்களது கட்சியின் சின்னத்தை ஒட்டித்தருவார்கள். நாங்கள் என்ன செய்வோம்?” என்று சீமான் பேசினார்.