“காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் ஒன்று சேருவதுபோல, மோடியை எதிர்ப்பதற்காக சிறு சிறு கட்சிகள் எல்லாம் இணைந்து இந்தியா கூட்டணியை அமைத்துள்ளன. ஆனால், ஒருபோதும் மோடி எனும் மாமனிதரை தோற்கடிக்க முடியாது” என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்.
தேர்தலில் மக்களை கவருவதற்காக சினிமா நட்சத்திரங்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பாஜகவின் நட்சத்திர பேச்சாளர் நமீதா, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நீலகிரி, திருப்பூர், கோவை பகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில் இருக்கிறார் நமீதா.
இன்று திருப்பூர் தொகுதி பாஜக வேட்பாளர் மயிலானந்தத்திற்கு ஆதரவாக, திருமுருகன் பூண்டி பகுதியில் பிரச்சாரம் செய்த நமீதா, “தமிழகத்தில் இதுவரை ஆண்ட கட்சிகள் மக்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவில்லை. ஆனால், மத்திய அரசு ஒவ்வொரு தனி நபருக்கும் இந்தியா முழுவதும் வீடு கட்டிக் கொடுத்துள்ளது. வீடு மட்டுமின்றி குடிநீர், மின்சார வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துள்ளது.
திமுக 234 தொகுதிகளில் மக்களை சந்தித்து தேவைகளை கேட்டுள்ளதா… ஆனால் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழகம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.
திமுக மக்களை பிரித்தாளும் முயற்சியில் இறங்கியுள்ளது. அவர்களின் தோல்வி உறுதி செய்யப்பட்டுள்ளது. காட்டில் யானையை எதிர்க்க சிறு சிறு மிருகங்கள் எவ்வாறு ஒன்று சேருமோ அது போல இந்தியா கூட்டணியில் கட்சிகள் சேர்ந்துள்ளது. இருப்பினும் அவர்களால் மோடி என்னும் பெரும் மனிதரை தோற்கடிக்க முடியாது” என்றார்.