நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ந் தேதி தொடங்கி ஜூன் 1-ந்தேதி வரை 7 கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4-ந் தேதி எண்ணப்பட உள்ளன. இதையொட்டி, தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் மும்முரமாக இறங்கியுள்ளன. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது.
அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரத்தை தொடங்கியுள்ளன. தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், மக்களவை தேர்தலுக்கான ம.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையை வைகோ இன்று வெளியிட்டார்.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான மதிமுகவின் தேர்தல் அறிக்கையை திருச்சியில் வைகோ வெளியிட்டார். ’24 உரிமை முழக்கம்’ என்ற பெயரில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் மதிமுக சார்பில் துரை வைகோ போட்டியிடுகிறார்.
கச்சத்தீவை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று மதிமுக வாக்குறுதி அளித்துள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது கூடவே கூடாது என்று மதிமுகவின் தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளது. திருச்சி, புதுக்கோட்டையில் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகங்கள் திறக்கப்படும். திருக்குறள் தேசிய நூலாக அறிவிக்கப்படும். கூடங்குளம் அணுஉலையை மூடுதல்.
கல்பாக்கம் ஈணுஉலையை அகற்றுதல். சுற்றுலா வளர்ச்சி, தூக்குத்தண்டனை ஒழிப்பு, திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலை தடுக்க தமிழக அரசுடன் இணைந்து புதிய திட்டங்கள் உருவாக்கப்படும். திருவரங்கத்தில் இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் அமைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட 74 வாக்குறுதிகளை வைகோ வெளியிட்டார்.