சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்கள் 3 பேர் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் உள்ள எல்லைப் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில் நக்சலைட்கள் 3 பேர் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தெலங்கானா – சத்தீஸ்கர் மாநில எல்லைப் பகுதியில் உள்ள பூஜாரி கான்கேர் பகுதியில் தெலங்கானாவின் நக்சல் எதிர்ப்பு படையான கிரேஹுன்ட்ஸ் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அவர்களுக்கு துணையாக சத்தீஸ்கர் போலீஸார் உதவி புரிந்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், “புரங்கேல், படேபல்லி, தோதிதும்னார் மற்றும் கம்பூர் பகுதிகளில் மாவோஸ்ட்டுகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்படி வியாழக்கிழமை முதல் இந்தத் தேடுதல் வேலை நடைபெற்றது.

இந்நிலையில், இன்று துப்பாக்கிச்சூடு நடந்தது. துப்பாக்கிச்சூடு முடிந்ததும் அந்தப் பகுதியில் இருந்து நக்சலைட்கள் 3 பேரின் உடல்கள் மற்றும் எல்எம்ஜி துப்பாக்கி, ஒரு ஏகே 47 துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இன்னும் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது” என்று தெரிவித்தனர்.

முன்னதாக, சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே இந்த வாரத்தில் நடந்த மோதலில் சுட்டுக் கொல்லப்பட்ட நக்சலைட்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்திருந்தது.