குருபரப்பள்ளியில் எஸ்பிஐ வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் இயந்திரத்தை வெல்டிங் மிஷின் உதவியுடன் உடைத்து ரூ.10 லட்சத்துக்கும் மேல் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளியில் கிருஷ்ணகிரி – ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் குருபரப்பள்ளி மேம்பாலம் இறக்கத்தின் கீழ் சிப்காட் பகுதியில், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கிக்கு சொந்தமான ஏடிஎம் மையம் கடந்த 3 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம் மையம் குருபரப்பள்ளியை சேர்ந்த மாதேஷ், என்பவருக்கு சொந்தமான கட்டிடத்தில் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை வங்கி ஊழியர்கள், ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் ஊழியர்கள், வழக்கம்போல் ஏடிஎம் மையத்தில் சுமார் ரூ.16 லட்சம் பணத்தை நிரப்பிச் சென்றனர். இன்று அதிகாலை சுமார் 3 மணி அளவில் ஏடிஎம் மையத்துக்கு வந்த மர்ம நபர்கள், சிசிடிவி கேமராக்கள் மீது கருப்பு நிற ஸ்ப்ரே அடித்து விட்டு, வெல்டிங் மிஷின் உதவியுடன் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துள்ளனர். பின்னர் அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தொடர்ந்து அதிகாலை 4 மணியளவில் ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் கட்டுப்பாட்டு மையத்திற்கு தகவல் சென்றுள்ளது. கட்டுப்பாட்டு மையத்திலிருந்து கட்டிடத் கட்டிடத்தின் உரிமையாளரை தொடர்பு கொண்டு ஏடிஎம் மையத்தை பார்க்குமாறு தெரிவித்துள்ளனர். அவர் வந்து பார்த்தபோது கொள்ளை சம்பவம் நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இது குறித்த தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
மேலும், கிருஷ்ணகிரி எஸ்.பி தங்கதுரை, ஏடிஎஸ்பி சங்கு, மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகியிருந்த தடயங்களை சேகரித்தனர். சிசிடிவி பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர்ந்து ஏடிஎம் மையத்தில் நேற்று மாலைக்கு பிறகு எவ்வளவு தொகை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து ஏடிஎம் மையத்தை பராமரிக்கும் நிறுவனத்தார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஏடிஎம் இயந்திரத்தை உடைத்த மர்ம நபர்கள் ரூ.10 லட்சத்துக்கும் மேல் கொள்ளையடித்து சென்றிருக்க வாய்ப்பு உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.