குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது என பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு குடியுரிமை திருத்தச் சட்ட மசோதா (சி.ஏ.ஏ.) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்த சட்ட மசோதா அமல்படுத்தப்படாமல் இருந்து வந்த நிலையில், கடந்த 11-ந்தேதி சி.ஏ.ஏ.வை அமல்படுத்துவதற்கான விதிமுறைகள் வெளியிடப்பட்டன. அத்துடன் இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்த சட்ட மசோதாவிற்கு எதிராக பல்வேறு எதிர்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் வெறுப்பு கொள்கைகளை சட்டப்பூர்வமாக்குவதற்காகவே சி.ஏ.ஏ. கொண்டு வரப்பட்டுள்ளதாக கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் விமர்சித்துள்ளார்.
இது குறித்து கேரளாவின் கொல்லம் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது;- “குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் சட்டத்தை நிறைவேற்ற எந்த அரசாங்கத்திற்கும் உரிமை இல்லை. குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) அரசியலமைப்பு உரிமைகளை மீறுகிறது. நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தின் முன் சமத்துவத்தை வழங்குகிறது. எந்தவொரு நபருக்கும் சிறப்பு உரிமை வழங்கப்படக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மதத்தின் அடிப்படையில் பாகுபாடு காட்டுவதை நமது அரசியலமைப்பு ஏற்கவில்லை.
ஆனால் இங்கு குடிமக்கள் இஸ்லாமியர்கள் மற்றும் இஸ்லாமியர் அல்லாதோர் என்று பிரிக்கப்படுகின்றனர். இதனை ஒருபோதும் ஏற்கக்கூடாது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு எப்போதும் மதத்தின் அடிப்படையில் மக்களிடையே பாகுபாடு காட்டி வந்துள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் கொள்கைகளை சட்டப்பூர்வமாக்குவதற்காகவே சி.ஏ.ஏ. கொண்டுவரப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ. என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. இதனை எதிர்த்து முதலில் குரல் எழுப்பியது கேரள அரசுதான். இந்த சட்டத்த்திற்கு எதிராக திருவனந்தபுரத்தில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த சட்டம் கேரளாவில் செயல்படுத்தப்படாது என்பதை வெளிப்படையாக அறிவித்தோம்.
சி.ஏ.ஏ. அமலுக்கு வந்த பிறகு அனைத்து அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பலமுறை கூறியுள்ளார். ஆனால் இதில் இஸ்லாமியர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். அவர்கள் யாரை குறிவைக்கிறார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அடுத்த ஆண்டு, ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாகி 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தீவிர வகுப்புவாத கொள்கைகளை உடையது. அவர்களது கொள்கையின் ஒரு பகுதியாக சி.ஏ.ஏ. விளங்குகிறது.” என்று பினராயி விஜயன் தெரிவித்தார்.