மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரிய வழக்கு : நாளை காலை 9 மணி வரை தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் கெடு

மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரிய விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் ஒதுக்கக் கோரி கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்கப்பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது வைகோ தரப்பில் தங்கள் கோரிக்கையை ஏற்று கட்சி நிர்வாகிகளின் பெயர்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்த தேர்தல் ஆணையம், பம்பரம் சின்னம் ஒதுக்கீடு செய்யவில்லை என்றும், வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி நாள் என்பதால், தங்கள் கோரிக்கையை பரிசீலிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், சட்டப்படி அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி இரண்டு தொகுதிகளுக்கு மேல் போட்டியிடும் பட்சத்தில் ஒரே சின்னம் ஒதுக்கப்படும் என்றும், மதிமுகவின் கோரிக்கை மீது இன்று முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், 14 ஆண்டுகளுக்கு முன்பு அங்கீகாரம் ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிமுகவுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக சம்பந்தப்பட்ட தொகுதியின் தேர்தல் அதிகாரி தான் முடிவு எடுப்பார் என்றும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, பம்பரம் சின்னம் பொதுச் சின்னம் பட்டியலில் உள்ளதா, இல்லையா என்பது குறித்து பிற்பகல் 2:15 மணிக்கு விளக்கம் அளிக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளிவைத்திருந்தனர்.

அதன்படி வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில், பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. மதிமுக அளித்த விண்ணப்பத்தின் மீது நாளை காலைக்குள் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதேசமயம், நாளை தேர்தல் ஆணையம் முடிவெடுத்து அறிவிப்பதால் இந்த வழக்கை நாளைக்கு தள்ளிவைக்க வேண்டும் என மதிமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், கடந்த சட்டமன்ற தேர்தலில் மதிமுக வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டுள்ளனர். திருச்சி தொகுதியில் போட்டியிடும் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் கேட்டு இன்று அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை நாளை பிற்பகலுக்கு தள்ளிவைத்தனர்.