அமலாக்கத்துறை காவலில் இருந்தபடியே சுகாதாரத் துறைக்கான உத்தரவுகளைப் பிறப்பித்த கேஜ்ரிவால்

டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கில் முதல்வர் கேஜ்ரிவால் கடந்த 21-ம் தேதி கைது செய்யப்பட்ட நிலையில், அவர் இன்று சிறையில் இருந்தபடி சுகாதாரத்துறை உள்ளிட்ட துறைகளுக்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளார். இது அவர் சிறையில் இருந்தபடி பிறப்பிக்கும் இரண்டாவது உத்தரவு என்பது குறிப்பிடத்தக்கது.

மதுபான கொள்கையில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலுக்குக் கடந்த நவம்பர் முதல் 8 முறை சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. இதனை நிராகரித்து வந்த கேஜ்ரிவாலை மார்ச் 21-ம் தேதி அமலாக்கத் துறை கைது செய்தது. இதனைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான பிறகும் கேஜ்ரிவால், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவில்லை. சிறையில் இருந்தபடியே அவர் ஆட்சி நிர்வாகத்தை கவனிப்பார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய டெல்லி அமைச்சர் சவுரப் பரத்வாஜ், “அரவிந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறை காவலில் இருந்தாலும், டெல்லி மக்களின் நிலை குறித்து கவலைப்படுகிறார். அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், டெல்லி மக்கள் அதனால் பாதிக்கப்படக்கூடாது என நினைக்கிறார். மேலும், டெல்லி மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு டெல்லி முதல்வர் எனக்கு உத்தரவிட்டுள்ளார்.

டெல்லியில், நடுத்தர வர்க்க மக்கள் மருந்துகளை எளிதில் வாங்கி விடமுடியும். ஆனால், டெல்லியில் வசிக்கும் லட்சக்கணக்கான ஏழை குடும்பங்கள் முழுவதும் அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகளை நம்பியே உள்ளனர். இந்த மருந்துகளில் சில வாழ்நாள் முழுவதும் எடுத்து கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய, ரத்த பரிசோதனைகளுக்கு பலரும் இவற்றையே நம்பியுள்ளனர்.

ஆனால், சில மொகல்லா கிளினிக்குகளில் இலவச மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் உள்ளது என தகவல்கள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சென்றது. இதனால், அனைத்து அரசு மருத்துவமனைகள் மற்றும் மொகல்லா கிளினிக்குகளிலும் இலவச மருந்துகள் கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும் என என்னிடம் கேட்டு கொண்டார். அவரிடம் இருந்து வரும் உத்தரவு, கடவுளிடம் இருந்து எனக்கு வருவது போன்றது. போர்க்கால அடிப்படையில் அதன்மீது நடவடிக்கை எடுப்போம் என்று பரத்வாஜ் தெரிவித்து உள்ளார்.