புதுக்கோட்டை அருகே அறந்தாங்கியில் கடைகளில் பெரும் தீ விபத்து : பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கடைகளில் இன்று  காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து தீக்கிரையாகி உள்ளன.

அறந்தாங்கியில் உள்ள சந்தை பகுதியில் ஏராளமான கடைகள் நெருக்கமாக உள்ளன. இதனால் மக்கள் நடமாட்டம் அதிகமாகவே இருக்கும். இந்நிலையில், அங்குள்ள ஒரு பாத்திர கடையில் இன்று காலை தீ பிடித்தது. கடை பூட்டப்பட்டிருந்ததால் கடையில் இருந்த பொருட்கள் பெரும் பகுதி எரிந்த நிலையில், இந்த தீயானது பாத்திரக்கடையின் அருகே உள்ள நகைக்கடைக்கும் பரவியது.

மேலும் அதன் அருகே இருந்த பட்டாசு சில்லறை விற்பனை கிடைக்கும் பரவியது. தொடர்ந்து அடுத்தடுத்து மளமளவென தீ பற்றி எரிந்ததோடு, இடைவிடாது வெடிச் சத்தமும் இருந்தது. இதனால் அப்பகுதி புகைமூட்டம் போல் காட்சியளித்தது. அறந்தாங்கி, ஆவுடையார்கையில், கீரமங்கலம் உள்ளிட்ட 4 இடங்களில் இருந்து வந்த தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை மேலும் பரவாமல் அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

எனினும், உடனடியாக தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ விபத்துக்குள்ளான எந்த கடையும் திறந்து பார்க்க முடியாததால் அந்த கடைகளுக்குகள் உள்ள பொருட்களின் சேத மதிப்பை உடனே கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் விபத்தில் எரிந்து நாசமாகி இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. இந்த தீ விபத்து எதனால் ஏற்பட்டது என்ற சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அறந்தாங்கியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.