டெல்லி ஜேஎன்யு பேரவைத் தேர்தலில் பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறும் வெற்றி : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

“வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது” என்று ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் தேர்தல் வெற்றிபெற்ற இடதுசாரி மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் அமோக வெற்றி பெற்றுள்ளனர். இத்தேர்தலில், ஆர்எஸ்எஸ் சார்பு அமைப்பான அகில் பாரதிய வித்யார்த்தி பரிஷத் எந்தப் பதவிக்கான போட்டியிலும் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக தனஞ்சய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 1996 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஜேஎன்யு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தலைவராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

இந்நிலையில், இடதுசாரி கூட்டணி ஆதரவு அமைப்பின் மாணவர்கள் வெற்றிக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ள இடது முன்னணியினருக்கு எனது வாழ்த்துகள்.

ஏ.பி.வி.பி அமைப்பினரின் வன்முறை வழிமுறைகளும், கடைசி நிமிடத்தில் இடது வேட்பாளர் ஸ்வாதி சிங்கின் வேட்புமனுவை நிராகரித்ததும் அவர்களின் தோல்வி பயத்தை அம்பலப்படுத்திவிட்டது. இத்தனை வெட்கக்கேடான செயல்களில் அவர்கள் ஈடுபட்டாலும், JNU மாணவர்கள் தங்களது முற்போக்கு செறிந்த மரபை எப்போதும் போல நிரூபித்துவிட்டனர். வலதுசாரி பாசிச சக்திகளின் வீழ்ச்சிக்குக் கட்டியம் கூறுவதாக இந்த வெற்றி அமைந்துள்ளது. வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய மக்கள் ஒன்றுசேர்ந்து பாஜகவை வீழ்த்துவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.