கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத், தனது குடும்பத்துடன் இன்று மனு தாக்கல் செய்தார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட சிட்டிங் எம்பியான செல்லகுமாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்த்து நிலையில், திடீரென அக்கட்சியின் ஓசூர் முன்னாள் எம்எல்ஏ கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத், தனது குடும்பத்தினருடன் வந்து மாவட்ட தேர்தல் அலுவலர் கே.எம்.சரயுவிடம் மனுத் தாக்கல் செய்தார். இச்சம்பவம் கூட்டணி கட்சியான திமுக மட்டுமின்றி காங்கிரஸ் கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்திடம் கேட்ட போது, “நான் இதுவரை சட்டப்பேரவை தேர்தலில் 4 முறை போட்டியிட்டுள்ளேன். மனுத்தாக்கலின் போது எவ்வித ஆடம்பரம், ஆர்ப்பாட்டம் இல்லாமல், அமைதியான முறையில் குடும்பத்துடன் வந்து மனுத்தாக்கல் செய்வது எனது வழக்கம், நம்பிக்கை. அதன்படியே இன்று கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் போட்டியிட மனுத்தாக்கல் செய்துள்ளேன். நான் மனுத்தாக்கல் செய்வது தொடர்பாக ஏற்கனவே திமுக மேற்கு, கிழக்கு மாவட்ட செயலாளர்களிடம் முறைப்படி தகவல் அளித்துவிட்டு வந்துள்ளேன்” என்றார்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தேர்தலில் இன்று அதிமுக, பாஜக, நாம்தமிழர் கட்சி வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்வதாக, ஏற்கெனவே தகவல் தெரிவித்திருந்த நிலையில், திடீரென காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மனுத்தாக்கல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.