“மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் எங்கள் வேட்பாளரை கைது செய்ய முயற்சி” – கண்கள் கலங்கிய துரைமுருகன்

செல்வாக்கு மிக்க எங்கள் வேட்பாளர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயற்சிக்கிறார்கள் என கண்கள் கலங்கியபடி நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராக டி.எம்.கதிர்ஆனந்த் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் மத்திய மாவட்டச் செயலாளர் ஏ.பி.நந்தகுமார் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்து பேசும்போது, ‘‘பிரதமர் மோடி வாரிசு அரசியல் பற்றி பேசுகிறார். ஆனால், நாங்கள் தியாகத்திலேயே வளர்ந்தவர்கள்.

மிசாவில் நான் கைதான போது எனது காலரை எனது ஒரு வயது மகன் கதிர்ஆனந்த் பிடித்துக் கொண்டான். அந்தப் பிஞ்சு கைகளை காவல்துறையினர் தூக்கி எறிந்து என்னை கைது செய்தார்கள். அதற்குப் பிறகு மூன்று மாதங்கள் எனது மகனை பார்க்க முடியவில்லை. பிறகு ஒரு வயது மகனான கதிர் ஆனந்தை சிறையில் பார்த்தபோது கட்டித் தழுவிக் கொள்ளலாம் என ஏங்கினேன். என்னை தொட முயற்சித்த போது அங்கு இருந்த காவலர் ஒருவர் நீ குற்றவாளி என்பதால் குழந்தையை தொடக்கூடாது என கூறி தடுத்துவிட்ட நிகழ்வால் கண்கள் கலங்கினேன்.

எனது மகன் அப்பா, அப்பா எனக்கூறியதை நினைக்கிறேன். பிறகு சிறையிலிருந்து வெளியே வந்து ஒரு வருட காலம் எனது மகனை நான் தொட்டதே இல்லை. அந்தளவுக்கு வலியை அனுபவித்தவர்கள் நாங்கள் (திடீரென கண் கலங்கி தழுதழுத்த குரலில் பேசினார்) எங்களைப் பார்த்தா வாரிசு அரசியல் என மோடி பேசுகிறார்.

இந்த காலத்தில் எந்த அப்பாவும், மகனுக்கு உத்தரவாதம் கொடுக்க மாட்டான். ஆனால், எனது மகனுக்கு நான் உத்தரவாதம் கொடுக்கிறேன். வரும் காலங்களில் குடியாத்தத்துக்கு அரசு மகளிர் கல்லூரி உட்பட பல திட்டங்களை செய்து கொடுப்பேன். இந்தியா மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த ஆட்சியில் ஜனநாயக குரல் வலையை நெரிக்கும் காரியத்தை மத்திய அரசு செய்கிறது. இந்த நாட்டில் ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது போல் ஒரே கட்சியை கொண்டுவர முயற்சிக்கிறார்கள். வடகொரியாவில் நடப்பது போன்ற ஒரு ஆட்சியை இங்கு நடத்த வேண்டும் என பாஜகவினர் கருதுகிறார்கள். நீங்கள் போடுகிற ஓட்டு ஜனநாயகத்தை காப்பாற்றுவதற்கான ஓட்டு. இல்லாவிட்டால், மீண்டும் ஒரு மிசா வரும்’’ என்றார்.

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘தேர்தல் சமயத்தில் வருமான வரித்துறை சோதனை மட்டுமல்ல இன்னும் பல செய்வார்கள். குறிப்பாக, சொல்லப்போனால் செல்வாக்கு மிக்க வேட்பாளரை கைது பண்ணுங்க, வழக்குப்பதிவு செய்யுங்கள் என சொல்லிக் கொண்டிருப்பதாக மேலிடத்தில் இருந்து தகவல் வந்திருக்கிறது. அதைப் பற்றி எல்லாம் நாங்கள் கவலைப்படவில்லை. தமிழ்நாட்டில் நாங்கள் மிகப்பெரிய வெற்றியை பெறுவோம்’’ என்றார்