பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய மத்திய அமைச்சருக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம்

பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் தமிழர்களைத் தொடர்புபடுத்தி பேசிய மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே தேர்தல் நடத்தை விதிகளை மீறியுள்ளதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் எழுதியுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தேர்தல் ஆணையத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. குற்றவாளியை என்ஐஏ இன்னும் கண்டுபிடிக்கவில்லை. ஆனால், இந்த சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி மத்திய பாஜக இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார்.

அவரின் கருத்துக்கள் தமிழகம் மற்றும் கர்நாடக மக்கள் இடையே வெறுப்பை பரப்பும் விதமாக அமைந்துள்ளது. மேலும், தமிழக மக்களை தீவிரவாதிகளாகப் பொதுமைப்படுத்தி, இரு சமூகங்களுக்கு இடையே, அதாவது தமிழர்கள் மற்றும் கன்னடர்களுக்கு இடையே விரோத்ததையும் பகைமையையும் உருவாக்க முயல்கிறது. தேர்தலை முன்னிட்டு தனது தேர்தல் வாய்ப்பை அதிகப்படுத்தி கொள்ள இவ்வாறு பேசியுள்ளார்.

அவரின் கருத்துக்களால் தமிழ் சமூகத்துக்கு எதிராக வன்முறையை தூண்டும் சாத்தியம் உள்ளது. அவரின் பேச்சுக்கள், கன்னட சமூகத்தினரிடையே தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் இருப்பதால் இது அப்பட்டமான தேர்தல் விதிமீறல் ஆகும். எனவே, மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீதும் அவர் சார்ந்த பாஜக மீதும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று திமுக வலியுறுத்தியுள்ளது.