நடைபெற உள்ள 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிரான அகில இந்திய அணியில் தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அணி முன்னணி பாத்திரம் வகிக்கும் என்றார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவரும், இரு முறை புதுக்கோட்டை மக்களவைத் தொகுதியின் உறுப்பினர், இரு முறை நாகை சட்டபேரவைத் தொகுதி உறுப்பினராகவும் இருந்த ஆர்.உமாநாத் நூற்றாண்டு விழா கருத்தரங்கு புதுக்கோட்டை நகர்மன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கில் தோழர் ஆர்.உமாத் குறித்த நூற்றாண்டு மலரை வெளியிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர்கள் சங்கரய்யா, நல்லசிவன், உமாநாத் போன்றோரின் நூற்றாண்டு விழாவை இப்போது கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். இந்த நூற்றாண்டுகள் வெறுமனே தலைவர்களைப் புகழ்ந்து பேசுவது மட்டும் நோக்கமல்ல, தலைவர்களின் வாழ்க்கை முறையை மறுவாசிப்பு செய்யும் முறைதான் இதுபோன்ற விழாக்கள் எதிர்காலத்தில் நமது இயக்கப் பணிகளில் இடர்பாடுகளை சந்திக்கும்போது, உமாநாத் போன்றோரின் போராட்ட வாழ்க்கை அவற்றை எதிர்கொள் உதவிசெய்யும்.
ஒன்பதரை ஆண்டுகள் சிறை வாழ்க்கையும், ஏழு ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கையும் வாழ்ந்தவர் உமாநாத். சிறையில் இருந்து உயிரைப் பணயம் வைத்து தப்பி வந்து மக்களுக்காக பணியாற்றியவர் உமாநாத். கம்யூனிஸ்ட்டுகள் இன்னல்கள் பலவற்றை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டு லட்சியத்துக்காக தியாகங்களைச் செய்யக்கூடியவர்கள், இட ஒதுக்கீட்டை ரத்து செய்து விடுங்கள் என்று சொல்லுகிற ஆர்.எஸ்.எஸ் இந்த நாட்டில் இருக்கலாம். எம்மதமும் சம்மதம் சொல்லுகிற இஸ்லாமியர்கள் இருக்கக்கூடாது என்கிற கோட்பாட்டை நிலைநிறுத்தப் பார்க்கின்றனர், பாராளுமன்ற மாண்புகளையோ சிதைத்து வருகின்றனர்.
2024-ல் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்புகிற பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும். 2024 தேர்தலில் பாஜவுக்கு எதிராக இந்திய அளவில் ஒரு மாபெரும் அணி உருவாக்கப்படும். அந்த பின்புலத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் தலைமையிலான அணி தமிழ்நாட்டில் செயல்படும் என்றார்.