மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு 26.64 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல்

மத்திய அரசிடம் இருந்து மாநிலங்களுக்கு 26.64 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் முதல் அலையின் பாதிப்புகள் குறைவாக இருந்த நிலையில், கொரோனா வைரசின் 2ம் அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனை கட்டுப்படுத்த மாநில மற்றும் மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.

முன்னதாக கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடும் பணியினை மத்திய அரசு கடந்த ஜனவரி 16ம் தேதி தொடங்கி வைத்தது. பல்வேறு கட்டங்களாக நடந்து வரும் தடுப்பூசி திட்டத்தில், கடந்த மே மாதம் 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடவும், மாநிலங்களே இந்த தடுப்பூசியை கொள்முதல் செய்யவும் மத்திய அரசு அனுமதித்தது.

இதற்கிடையில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு செலுத்துவதற்காக வரும் 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க இருப்பதாக பிரதமர் மோடி கடந்த 7ம் தேதி அறிவித்தார். இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய 2 தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்கப்பட்டு வருகிறது. ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியும் இந்த மாத மத்தியில் வர்த்தக ரீதியில் பயன்பாட்டுக்கு வருகிறது.

இந்நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மத்திய அரசு சார்பில் அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 26,64,84,350 தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள தடுப்பூசிகள் (வீணானவை உள்பட) மொத்தம் 25,12,66,637 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மாநிலங்களிடம் தற்போது 1,53,79,233 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும், அடுத்த 3 நாட்களில் 4,48,760 தடுப்பூசிகள் மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.