பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை – அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக இதுவரை நிறைவேற்றவில்லை என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவரது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது, தமிழ்நாட்டில் பெட்ரோல் விலை ரூ.100யை தொட்டுள்ளது. கொடைக்கானலில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.99.95க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் டீசல் ரூ.91.64 ஆக உயர்ந்திருக்கிறது. இந்த விலை உயர்வு மக்களைக் கடுமையாக பாதிக்கும்.

கலால் வரியாக ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32.90 ரூபாயும், டீசலுக்கு 31.80 ரூபாயும் மத்திய அரசு வசூலிப்பதுதான் விலை உயர்வுக்குக் காரணம். தமிழக அரசின் வரியையும் சேர்த்து ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.58.28, டீசலுக்கு ரூ.50.13 வரியாக வசூலிக்கப்படுகிறது. இது நியாயமல்ல.

தமிழ்நாட்டில் மாநில அரசின் மதிப்புக் கூட்டுவரியாக பெட்ரோலுக்கு ரூ.25.38 (34%), டீசலுக்கு ரூ.18.33 (25%) வசூலிக்கப்படுகிறது. மத்திய அரசு வரியில் மாநில அரசின் பங்கையும் சேர்த்து தமிழக அரசுக்கு முறையே ரூ.39.19, ரூ.31.68 வருமானமாகக் கிடைக்கிறது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5, டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு இதுவரை நிறைவேற்றவில்லை. மக்கள் நலன் கருதி பெட்ரோல், டீசல் மீதான வரிகளை மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.10 வீதம் மொத்தம் ரூ.20 குறைக்க முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.