பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் – திருநாவுக்கரசர் பேட்டி

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா காருக்காகுறிச்சி வடதெருவில் ஹைட்ரோகார்பன் என்ற திட்டத்தின் பெயரை மாற்றி ஆயில் கேஸ் எடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு டென்டர் விடுத்துள்ளதை பற்றி வரலாறு நாளிதழ் நிருபர் கேட்டபோது, புதுக்கோட்டை மாவட்டத்தில்  திருவரங்குளம், கறம்பக்குடி, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி ஆகிய ஒன்றியங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயில் கேஸ் எடுக்கும் திட்டத்தினை விவசாயிகளும் மாநில அரசும் எதிர்த்து வரும் நிலையில் விவசாயிகள் நலன் கருதி ஆயில் கேஸ் எடுக்கும் திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மக்களுக்கு ஏற்புடைய திட்டங்களை மட்டுமே மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கூறினார்.

ஆதனக்கோட்டை முந்திரி தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான  தானிய சேமிப்புக் கிடங்கும் தானியகளமும் கட்டித்தர  தற்போது கொரோனாவால் பாராளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதால் மாநில அரசின் மூலமாக இத்திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்துவேன் என கூறினார்.

மேலும் ஆதனக்கோட்டை சுகாதார நிலையத்திற்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்கிடவும், கஜா புயலில் இடிந்துள்ள சுற்றுச்சுவரை கட்டித் தருவதாக உறுதி கூறியதோடு, சுகாதார நிலையத்திற்கு தேவையான முககவசங்களை வழங்கினார்.

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், பொதுமக்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதையும் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி, கிராமங்களில் மருத்துவ முகாம் அமைத்து அதிக அளவில் கொரோனா தடுப்பூசி போடவேண்டுமென வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணனுக்கு அறிவுரை வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பி.முருகேசன், மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பெனட்.அந்தோணிராஜ், ராஜீவ்காந்தி, பஞ்சாயத்து ராஜ் சங்கதன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வை.கோ இராசன், திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மணிவண்ணன், ஆதனக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.