நாளை முதல் அனைத்து கடைகளும், மால்களும் திறக்க அனுமதி : ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்து டெல்லி முதல்வர் உத்தரவு

தலைநகர் டெல்லியில் நாளை முதல் அனைத்து கடைகளும், மால்களும் திறக்க அனுமதி அளித்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டெல்லியில் கொரோனா தொற்றின் 2வது அலை படிப்படியாக குறைந்து வரும் நிலையில், டெல்லியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியுள்ளதாவது, நாளை காலை 5 மணி முதல் டெல்லியில் பல்வேறு தளர்வுகளுக்கு அனுமதி வழங்கப்படும் வகையில், அனைத்து கடைகளும், மால்களும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதி வழங்கப்படுகிறது.

தனியார் நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் காலை 9 முதல் மாலை 5 மணி வரை இயங்கலாம். உணவகங்கள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் மெட்ரோ ரயில் மற்றும் பேருந்துகளில் 50 சதவீத பயணிகளுடன் செயல்பட அனுமதி. ஆட்டோக்கள், டாக்சிகளில் 2 பயணிகளுக்கு மட்டும் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படுகிறது.

வழிபாட்டுத் தளங்கள் பக்தர்களின்றி திறக்க அனுமதி. திருமணம், இறுதிச்சடங்கு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டும் கலந்து கொள்ள அனுமதி. இது தவிர பள்ளிகள், கல்லூரிகள், கல்வி நிலையங்களை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

மேலும் அரசியல் கூட்டங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள், திரையரங்குகள், அழகு நிலையங்கள், உடற்பயிற்சி மையங்கள், பூங்காக்கள் ஆகியவற்றிற்கான தடை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.