தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு, கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் நாளை முதல் டாஸ்மாக் கடைகள் செய்லபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதற்கிடையே தமிழகத்தில் நாளை டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதை கண்டித்து தமிழக பாஜகவினர் இன்று அவரவர் வீடுகளின் முன்பு நின்று ஆர்ப்பாட்டம் மேற்கொள்வார்கள் என அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில் சென்னையில் உள்ள பாஜக தலைமையகமான கமலாலயத்தில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதில் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று வலியுறுத்தியும், டாஸ்மாக் கடைகளை திறக்கும் அரசின் முடிவை கண்டித்தும் பதாகைகளை ஏந்தி முழக்கம் எழுப்பினர்.

மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பாஜகவினரும் டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரவர் வீடுகளின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.