கொரோனா வென்ற மாநிலமாக தமிழகம் மாறும் நிலை உருவாகும் – உதயநிதி ஸ்டாலின் பேச்சு

கொரோனா வென்ற மாநிலமாக தமிழகம் மாறும் நிலை உருவாகும் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சேலம் நிலவாரப்பட்டி பகுதியில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் கீழ், குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கு 5 கிலோ இலவச அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பனமரத்துப்பட்டி ஒன்றிய திமுக செயலாளர் பாரப்பட்டி சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அமைச்சர் செந்தில்பாலாஜி முன்னிலை வகித்தார்.

இந்நிகழ்வில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 1,200 பயனாளிகளுக்கு 5 கிலோ இலவச அரிசியினை வழங்கினார்.

பின்னர் விழாவில் பேசிய அவர் கூறுகையில், தமிழகத்தில் வெற்றி பெற்றாலும் தோல்வியடைந்தாலும் மக்களுடன் இருப்பது திமுக தான். தமிழகத்தில் திமுக ஆட்சியில் இரண்டு மாதங்களுக்கு முன்பு தடுப்பூசி செலுத்திக்கொள்ள பயந்த மக்கள், தற்போது தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஆர்வம் காட்டுகின்றனர் எனக்கூறினார்.

மேலும் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, கொரோனா வென்ற மாநிலமாக தமிழகம் மாறும் நிலை உருவாகும் என்று பேசினார்.

விழாவில்  நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜா, சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரபு, சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.சிவலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.