ஆலங்குடி அருகே உள்ள எண்ணெய் கிணறுகளை ஏலம் விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் அரை நிர்வாண போராட்டம்

மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் கடந்த 10ம் தேதி மூன்றாம் கட்ட எண்ணெய் வயல்கள் ஏலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கருக்காகுறிச்சி வடதெரு பகுதியில் உள்ள எண்ணெய் கிணறுகளை ஏலம் விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியினர் அரை நிர்வான போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 15ம் தேதி மத்திய அரசு நெடுவாசல் பகுதிகளில் ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி வழங்கிய நிலையில் மறுதினமே அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் விவசாயிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதற்கட்டமாக 22 நாட்கள் நடந்த போராட்டம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் மீண்டும் தொடர்ந்த போராட்டம் 174 நாட்கள் நடைபெற்றது.

தொடர்ந்து விவசாயிகளிடம் பல்வேறு கட்ட கோரிக்கைகளின் பலனாக கடந்த 2019ம் ஆண்டு ஜனவரி 16ம் தேதி இத்திட்டம் கைவிடப்படுவதாக அறிவிப்பு வந்தது நெடுவாசல் மக்களிடையே பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் தந்தது.

இதனைத்தொடர்ந்து நெடுவாசல், நல்லாண்டாகொல்லை, கருக்காகுறிச்சி, வடகாடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் ஒவ்வொரு கிராம சபை கூட்டங்களிலும் புதுக்கோட்டை மாவட்டத்தை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றி, அதன் பலனாக கடந்த 2019ம் ஆண்டு நெடுவாசல் உள்ளிட்ட பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததோடு இங்கு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

இந்நிலையில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற மூன்றாம் கட்ட ஏலத்தில் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி  வடதெரு பகுதியில் உள்ள எண்ணெய் கிணற்றில் எரிவாயு எடுப்பதற்காக மத்திய பெட்ரோலியத்துறை அனுமதி அளித்துள்ள நிலையில் அங்கு எரிவாயு எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் இன்று அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.