தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 12 நாள் நீதிமன்ற காவல்

தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 12 நாள் நீதிமன்ற காவல் விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக் உத்தரவிட்டுள்ளார்.

மத்திய அரசின் ஜிஎஸ்டி வரி கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் நாகராஜன் ( 59). இவர் சென்னை பிரைம் என்ற பெயரில் தடகள பயிற்சி மையத்தை நடத்தி வருகிறார். இந்த மையத்தின் மூலம் சென்னை பிராட்வே பஸ் நிலையத்தையொட்டி உள்ள பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான மைதானத்தில் வீரர்-வீராங்கனைகளுக்கு பயிற்சி அளித்து வந்தார். இந்த நிலையில் நாகராஜன் மீது அவரிடம் பயிற்சி பெற்ற வீராங்கனை ஒருவர் சென்னை பூக்கடை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு பாலியல் புகார் அளித்தார். அந்த மனுவில், ‘பிசியோதெரபி’ பயிற்சி அளிப்பதாக கூறி நாகராஜன் ‘செக்ஸ்’ சேட்டையில் ஈடுபட்டார் என்று கூறியிருந்தார். அதன் பேரில் பூக்கடை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ‘போக்சோ’ உள்ளிட்ட 5 சட்டப்பிரிவுகளின் கீழ் நாகராஜன் மீது வழக்குப்பதிவு செய்தார். இதைத்தொடர்ந்து அவரை உடனடியாக கைது செய்ய போலீசார் முடிவு செய்தனர். ஆனால் நாகராஜன் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் காவல்துறை கண்காணிப்புடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பின்னர் அவர் நேற்று உயிர் தப்பினார். எனினும் அவர், மிகுந்த மன அழுத்தத்தில் இருந்தார். எனவே அவரை கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு போலீசார் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மனநிலை பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதைத்தொடர்ந்து அவரை போலீசார் வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே சென்னையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் கமிஷ்னர் சங்கர் ஜிவால், தடகள வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் பயிற்சியாளர் நாகராஜன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என்று அறிவித்தார். அதன்படி நேற்று விசாரணையின் முடிவில் நாகராஜன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், விளையாட்டு வீராங்கனைகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்த புகாரின் அடிப்படையில் தடகள பயிற்சியாளர் நாகராஜனுக்கு 12 நாள் நீதிமன்ற காவல் தண்டனை விதித்து போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி முகமது ஃபரூக் உத்தரவிட்டுள்ளார்.