நடிகர் நிதிஷ் வீரா கொரோனா பாதிப்பால் உயிரிழப்பு

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் நிதிஷ் வீரா சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

கொரோனா வைரஸ் தினமும் பல உயிர்களை பறித்து வருகிறது. கொரோனா 2வது அலைக்கு திரைப்பிரபலங்களும் அதிகளவில் இறந்து வருகின்றனர். கடந்த ஆண்டு பின்னணி பாடகர் எஸ்.பி.பி. உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இந்நிலையில் தற்போது 2வது அலை பலரையும் காவு வாங்கி வருகிறது. இதன்படி கே.வி.ஆனந்த், பாண்டு, பாடகர் கோமகன், நடிகர் மாறன், தயாரிப்பாளர் சேலம் சந்திரசேகர், சின்னத்திரை நடிகர் குட்டி ரமேஷ் என கொரோனாவால் உயிரிழந்த திரைப்பிரபலங்களின் பட்டியல் நீள்கிறது.

இந்நிலையில் புதுப்பேட்டை, வெண்ணிலா கபடிக்குழு, காலா, அசுரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள நடிகர் நிதிஷ் வீரா (45) கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார். முன்னதாக கொரோனா நோய் தொற்றுக்கு ஆளான நிதிஷ், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை 6.30 மணி அளவில் உயிரிழந்தார். நிதிஷ் வீரா. தற்போது விஜய் சேதுபதியுடன் லாபம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. நடிகர் நிதிஷ் வீராவின் கொரோனா மரணம் திரையுலகினர் இடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.