தோப்பூரில் 500 ஆக்சிஜன் வசதியுடன் தற்காலிக மருத்துவமனை : அமைச்சர் பி.மூர்த்தி

மதுரை தோப்பூரில்,  ஆக்சிஜன் வசதி கொண்ட 500 படுக்கையுடன் தற்காலிக மருத்துவமனை ஒரு வாரத்தில் செயல்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

தமிழகத்தில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்குவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி மதுரையில் நேற்று ரூ.2000 வழங்கப்பட்டது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி செட்டிகுளம், அலங்காநல்லூர் பகுதிகளிலும், நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் வடக்கு மாசி வீதியிலும் துவக்கி வைத்தனர்.

செட்டிகுளத்தில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது, கடந்த ஆண்டு தமிழகத்தில் தொற்று பாதிப்பால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ 5,000 வழங்க வேண்டும் என ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார். ஆனால் அப்போதைய அரசு ரூ.1000 மட்டுமே வழங்கியது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ரூ.4000 வழங்கப்படும் என அறிவித்தார். அதே போல் பதவியேற்றவுடன்  ரூ.4 000 வழங்கும் முதல் உத்தரவில் கையெழுத்திட்டார். தற்போது அதன் முதல் தவணையாக ரூ.2000 வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று பரவலை தடுக்கவே ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நீட்டிப்பதும், விரைவில் முடிவுக்கு கொண்டு வருவதும் மக்கள் கையில் தான் உள்ளது. பொதுமக்கள் ஊரடங்கு காலத்தில் 15 நாட்கள் சுய கட்டுப்பாட்டுடன் வீட்டில் இருந்தால் நோய் கட்டுக்குள் வந்து விடும்.மதுரை மற்றும் தென் மாவட்டங்களுக்கு கேரளாவில் இருந்து வந்து கொண்டிருந்த 25 டன் ஆக்சிஜன் கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் இப்பகுதியில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து மதுரையில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் பற்றாக்குறை உள்ளதாக முதல்வருக்கு கோரிக்கை விடுத்தோம். அதனையேற்று மதுரை தோப்பூரில் 500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் கொண்ட சிகிச்சை மையம் அமைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் துவங்கி நடக்கிறது. இன்னும் ஒரு வாரத்தில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வந்து விடும். அதேபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கும் ரெம்டெசிவிர் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் 500 பேருக்கு வழங்கும் வகையில் கூடுதல் மருந்துகள் வழங்கவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் பயன்பாட்டிற்காக கலெக்டர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் 15 செவிலியர்கள் கொண்ட கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களை தொடர்பு கொண்டு சிகிச்சைக்கான தகவல்களை பெற்றுக் கொள்ளலாம். கொரோனா தொற்றிலிருந்து மக்களை காக்க எதிர்கட்சியினரின் கருத்துக்களையும் கேட்டறிந்து வெளிப்படை தன்மையுடன் செயல்படும் இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

71 − = 64