தமிழக அரசு சார்பில் 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் அறிவிப்பு

90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்குவதற்கான உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் எடுப்பதற்கு வருகிற ஜூன் மாதம் 5ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2ம் அலை தீவிரம் காட்டி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், கொரோனாவுக்கு பயன்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசிகளின் பற்றாக்குறை தொடர்ந்து நிலவி வருகிறது.

இதற்கிடையே கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் முக.ஸ்டாலின் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அனைத்து மாநிலங்களிலும் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ளவர்களுக்கு, மாநில அரசுகளே தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், தமிழகத்திற்கு சுமார் 13 லட்சம் தடுப்பூசிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு, 18 வயதில் இருந்து 45 வயது வரை உள்ள அனைவருக்கும் தடுப்பூசி போடுவதற்கு போதிய அளவில் இல்லாததால், உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் (டெண்டர்) மூலம் தடுப்பூசிகளை இறக்குமதி செய்து பயன்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது.

அதன்படி 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்குவது தொடர்பாக, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் உலகளாவிய ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன.

அதாவது தடுப்பூசி தயாரிக்கும் யாரும், இந்த கொள்முதலில் பங்கேற்கலாம். இதற்கு ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். 90 நாட்களில் 5 கோடி தடுப்பூசிகள் வழங்க வேண்டும்.

இந்த டெண்டருக்கு ஜூன் 5ம் தேதி காலை 11 மணிக்குள் நிறுவனங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. அன்றைய தினம் பகல் 12 மணிக்கு டெண்டர் திறக்கப்பட்டு, தடுப்பூசி கொள்முதல் செய்வதற்கான நிறுவனம் இறுதி செய்யப்படும் என தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

− 5 = 5